Saturday, 9 May 2020

மட்டக்களப்பின் முதல் தடம்... (பங்குனி 2018)


பிறந்து 36 வருடங்கள்  உருண்டோடிய பின்னர்தான்  மீன்பாடும் தேன் நாடு தன் மண்ணை மிதிக்க என்னை அழைத்தது. இலங்கை எனும் இயற்கை பேரரசியின் கிழக்கு மாகாணத்தின் நடுநாயகமான மாவட்டம். தரைத் தோற்றத்தில் மூன்று பக்கமும் தரையால் சூழப்பட்டு, ஒரு பகுதியினூடாக நீர் தரையை ஊடறுத்துள்ள களப்பு. வாவியின் பேரழகில் மிதக்கும் நகரமான மட்டக்களப்பு மண்ணை எமது கையஸ் வாகனம் வந்தடைந்த நேரம் இரவு 10.30. 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமண அழைப்பிதழை வைத்துவிட்டு கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் நண்பர் ரம்ஸீன். இரண்டு வருடப் பழக்கம், காத்தான்குடியில் இருந்து வேலை நிமித்தமாக யாழ்ப்பாணம் வந்தவர் நண்பர் ஜனனன் மூலமாக அறிமுகமானவர். ரம்ஸீன் அந்த 2 வருடங்களில் எம் நட்பு வட்டத்தில் மிக முக்கியமானவராக அனைவருடனும் நெருக்கமாகியிருந்தார். அந்த இரண்டு வருடங்கள் நாம் நிறைய சுற்றியிருக்கிறோம், சாப்பிட்டிருக்கிறோம், அவை பற்றிய பதிவுகள் பின்னர் எழுதப்படும் 😆

ரம்ஸீனின் திருமண அழைப்பை தவிர்க்க முடியாது, அதனால் நம் நண்பர்கள் குழு பிரயாணத்திற்கு தயாராகிவிட்டது. வெறும் திருமண பயணமாக இல்லாமல் இரண்டு நாள் சுற்றுலாவாக திட்டமிட்டோம். எட்டுப்பேர், பலருக்கும் மட்டக்களப்பு அதுதான் முதல்தடவை. 

வழமைபோல் அதிகாலை நேரத்தில் திட்டமிட்ட பயணம், ஆனால் வழமைபோல பத்துமணி தாண்டியே யாழ்ப்பாண நகரைத் தாண்டினோம். சுவேந்திரன்; எம்மவர்களில் மூத்தவர், பச்சிலர். வாகனத்தை கையில் கொடுத்தால் பத்து நாளைக்கும் சலிக்காமல், உற்சாகமாக வாகனமோட்டும் ட்ரைவிங் வெறியன். கூடவே கிட்டத்தட்ட வடகிழக்கு பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பரிச்சயமான, பரிச்சியம் இல்லையென்றால் என்ன பரிச்சியமானது போல காண்பிக்கும் அசகாயசூரன். கடக்கும்‌ இடங்களின் போரியல் தடயங்கள், வரலாறுகளை தெரிந்ததும் கற்பனையும் என இரண்டற உருட்டி கலந்து அடித்தாலும் அத்தனை சுவாரசியமான கதைசொல்லி. அதேநேரம் நேரந்தவறாமைக்கு நேரெதிரி, வரலாற்றில் சொன்ன நேரத்திற்கு 1மணி நேரம் பிந்தி வராத நாளே கிடையாது. சில பல இம்சைகள் தந்தாலும் பிரயாணங்களின் அழகாக்கி எம் தல சுவேந்திரன். 

சுவேந்திரனின் கால் வாகனத்தின் பிரேக்கை அழுத்தி நிறுத்திய இடம்; பரந்தன் கடந்து கிளிநொச்சி நுழைந்ததும் வரவேற்கும் பாரதி உணவகம். சோறு கறி, தந்தூரி சிக்கன், அன்னாசி யூஸ் என பிடித்தவர் பிடித்த உணவை உண்ண வயிறும் மனமும் பாரதியின் பரிமாறலால் நிறைந்தது. கிளிநொச்சியில் நம்பி சாப்பாட்டில் கைவைக்க பாரதியிடம் செல்ல தயங்கத் தேவையில்லை. 

முறிகண்டி பிள்ளையார்... 90 சதவீதமான வாகனங்கள் தரித்து பிள்ளையாரை வணங்காமல் செல்வதில்லை. பாரதியில் அசைவ உணவுகள் உள்ளே போய் ஒருமணி நேரம் ஆகாத நிலையில் சற்று தயங்கி தயங்கி நின்றாலும்; பின்னர் நம்ப பிள்ளையார் தானே என்று பிள்ளையாரை சற்று தூர நின்று குட்டிக் கும்பிட்டோம். 

பயணம் தொடர்ந்தது, வவுனியா கடந்து சில மணி நேரத்தில் தற்போது கிண்ணியா.... திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள இடம். அழகிய கிண்ணியா பாலத்தை கடந்த பின்னர் ஓரிடம்..! கன்னி இல்லாமல் கூட இருப்பர், சிலர் தண்ணி இல்லாமல் இருக்கமாட்டர் என்கிற உலக நியதிக்கு அமைய; கிண்ணியாவில் தண்ணி வாங்க வான் நிறுத்தப்படுகிறது. 

அடுத்த சில மணித்தியாலங்கள் பொறுமையாக இருக்க முடியுமா என்ன? சட்டத்தை கடுமையாக மதிப்பவர்கள் என்பதால்; ஓடும் வாகனத்தில் தண்ணி அடிக்க சட்டத்தில் இடமில்லை என்பதை அறிந்திருந்ததால் ஆங்காங்கே வாகனம் நிறுத்தும் போதெல்லாம் பியர் டின்கள் சில காலியாகின.

இயற்கை உபாதையை வீதியோர பற்றைகளுக்குள் சரமாரியான வேட்டுக்களாக தீர்த்துக்கட்டிவிட்டு வீதியில் கால்நீட்டி‌ இருந்து சில நிமிடங்கள் இளைப்பாறிய அனுபவங்களை எல்லாம் கடந்து ஒருவழியாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தோம். 

கொலைப் பசி..  முன்னமே ரம்ஸீன் சிபாரிசு செய்ததால் ஹாஜியார் உணவகத்தின் முன் வாகனம் நிறுத்தப்பட்டது. கஷ்டகாலம் ஹாஜியாரில் கடையை பூட்டும் வேலை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. சரி இனி என்ன செய்வது என்று அருகில் இருந்த இப்ராஹிம் சாப்பாட்டுக் கடையினுள் நுளைந்தோம். 

ஆன்டி வெறியர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிளேன்டி வெறியர்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அது எங்கட டீம்தான், சப்ளையரே "ஏன்டா ஏன்" என பார்க்கும் அளவுக்கு ஆளுக்கு ஐந்தாறு இஞ்சிப்பிளேன்டி அடிப்பதில் கில்லாடிகள். பிளேன்டி மட்டுமல்ல ஆம்லெட்டிலும் கடும் காமம் உள்ள கூட்டம் இது. 

இப்ராகிம் டீ மாஸ்டர் மாங்கு மாங்கென்று இஞ்சிப் பிளேன்டி ஊத்த ஊத்த, கொத்து ரொட்டியை தந்துவிட்டு கொத்து மாஸ்டர் ஆம்லெட்டுக்கான முட்டைகளை உடைத்து கோதுகளை எறிந்து கொண்டிருந்தார். பெண்களில்கூட சற்று டாக் கலர்களிலேயே என் கண்கள் அதிகம் போகும், ஆனால் அசைவ கடைகளின் இடியப்பம் என்றால் பால் நிறத்தில் இருக்கவேண்டும். கூடவே முஸ்லிம் / சிங்கள கடைகளின் பாலாணம் (சொதி) + இடித்த சம்பல் + பருப்புக்கறி வெள்ளை இடியப்பத்தை தேவாமிர்தமாக்கும், கூடவே ஆட்டிறைச்சி கறி..! இப்ராகிம் 11.00 மணி கடந்தும் அருமையான உபச்சாரத்தை கொடுத்தது..! நம் ஊர் கடைகளில் கடை பூட்டப்போகும் நேரத்து ஊழியர்களது உபச்சாரத்தை நினைத்து பார்த்தோம்..! ம்ம்ம்.. கஸ்டமர் சேவிசில் நாம் இன்னமும் கிரிக்கெட்டில் சிம்பாவேதான்.

கல்லடி... மட்டக்களப்புக்கு தென்கிழக்கு திசையில் உள்ள இடம். அழகிய கல்லடி கடற்கரையை அண்டிய பிரதேசம். எமக்கான தங்குமிடம் அங்கேதான் ஒழுங்கு செய்திருந்ததால் கல்லடி பாலத்தை நோக்கி வாகனம் செல்லவும்; ட்ராபிக் பொலிஸ் அடித்த டோச்லைட் மறித்தது. 

Documents எல்லாம் ‌சரியாக இருந்தது, ஏன் ஹெட்லைட் நிப்பாட்டவில்லை என்று ஆரம்பித்தார் ஆபீசர். ஓ.... இவர் அதுக்கு வர்ராரில்லன்னு புரிந்தது; ஆனால் வாகனம் ஓட்டுவது யார்? எமனுக்கே இடியப்பம் தீத்திற தல சுரேந்திரன். இப்ராஹிம்ல சாப்பிட்ட இடியப்பம் செமிக்க முன்னமே மறிச்ச ஆபீசருக்கு தல ஏதோ இடியப்பம் தீத்தி மந்திரமோதிவிட; ஆபீசர் Goodnight சொல்லி வழிவிட வான் கிளம்பியது. இப்படி ஆபீசர்களிடம் தல ஓதும் மந்திரம் என்ன என்பது இன்று வரை நமக்கு தெரியாது; பாட்ஷா ரஜினி போல "உண்மையை சொன்னேன்" என பல்லை காட்டியபடி வருவான் தல, ஆனால் வெற்றியோடு. 

Beni Beach Resort. கல்லடி கடற்கரையை அண்டிய சிறு கிராமத்தில் சிறிய வீடு ஒன்றை சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு விடுதியாக்கி இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு உள் விறாந்தையில் வரவேற்க நான்கு அறைகொண்ட வீட்டை எமது அணி ஆட்கொண்டது. 

பல மணிநேர பயணம், வயிறு நிறைந்த உணவு, நேரம் இரவு 11.30 கடந்திருந்தாலும் வீட்டினுள் அடங்கியிருக்க மனம் விரும்பவில்லை. அருகில் இருந்த கல்லடி  கடற்கரையை  2 நிமிடத்தில் நடந்து அடைந்தோம். ஒரு கட்டடத்தின் படிக்கட்டில் சிலர் அமர, ஏனையவர்கள் மணலில் நடந்து சற்றுத்தூரத்தில் இருந்த கடலின் அலை தொட்டுவிட்ட நுரைகளின் ஈரம் காலில்ப்படும் இடம்வரை சென்றோம்.

ம்ம்ம்.. பொறாமை. இரண்டு மூன்று இளம் குடும்பத்தினர், கணவன், மனைவி, பிள்ளைகள் என வார இறுதி விடுமுறையை கடற்கரையில் கொண்ணாடிக் கொண்டிருந்தார்கள். பொதிகளில் உணவு, விரிக்க பெரிய படங்கு, போர்வைகள் என திட்டமிட்ட அழகிய இரவில் 12 மணி கடந்தும் பிள்ளைகளின் விளையாட்டுக்கள் ஓயவில்லை.  சுதந்திரமாக துணிந்து இப்படி இரவு நேரத்தில் கடற்கரையில் திளைத்திருக்க கல்லடி கொடுத்த பாதுகாப்பு உத்தரவாதம் ஆச்சரியமாக இருந்தது. 

மற்றவர்கள் விடுதி சென்றபின்; நாம் ஓரிருவர் 12.00 மணி கடந்த பின்னரும் சற்று தூரம் இடம் / விடுப்பு பார்க்கவும், தின்றது செமிக்க வேண்டியும் 20 நிமிடங்கள் நடை போட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினோம்‌. களைப்பு, பிந்திய உறக்கம் என அதிகநேரம் காலையில் உறங்க நியாயமான காரணம் இருந்தாலும்; கிழக்கு பக்கமாக இருக்கும் கல்லடி கடற்கரையின் சூரிய உதயத்தை தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், அலாரம் சரிசெய்து தூங்கப்போனது 1 மணியளவில். புது இடம், எங்கே தூக்கம் வரும்?  

2,3 மணி நேர தூக்கம்கூட இல்லை, முழிப்பு வந்துவிட்டது. ஒருவாறு நிலம் தெரியும் வெளிச்சம் வர; நண்பன் செத்தல் என்கிற செந்தூரனை அழைத்துக் கொண்டு கல்லடி கடற்கரைக்கு கிளம்பினேன். எனக்கும் சூரியனுக்கும் ஒரு முற்பிறவி பகை ஏதோ இருந்திருக்க வேண்டும். புது இடம் எங்கும் கமெராவுடன் போனால் முகிலுக்குள் மறைந்திருந்து கடுப்பேத்துவதே அவன் வேலை. கல்லடியிலும் தன் வேலையை காட்டினாலும்; அப்பப்போ வெளிவந்ததில் ஒருசில புகைப்படங்கள் கிடைத்தது. கரைவலை இழுப்பதை முதல் முதலாக நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்றைய  அதிகாலை அழகானதாக கடந்தது. தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் நாள் அழகாக அருமையாக நகர்ந்தது.

காலை 8 மணிக்கெல்லாம் அனைவரும் தயார். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை நோக்கி செல்ல தயாரானோம். செல்லும் வழியில் காத்தான்குடியில் மாப்பிள்ளை ரம்ஸீனை சந்தித்தபோது; மாப்பு மாமனார் வீட்டில் இருந்தார். அவர் உள்ளே திரும்பத்திரும்ப அழைத்தபோதும் அடுத்த சில மணித்தியாலங்களில் வலீமா இருக்கும்போது தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் வீதியில் நின்று பேசிவிட்டு மதியம் சந்திப்பதாக சொல்லிவிட்டு கிளம்பினோம்.

காத்தான்குடியில் இருந்து ஆரையம்பதி வீதியால் சென்றபோது யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் இருப்பதுபோல இருந்தது; ஆனால் காத்தான்குடியோ செல்வச் செழிப்புடன் மத்திய கிழக்கு நாடுகள் போல இருந்தது. ஹிஸ்புல்லா காத்தான்குடியை அப்படி அழகாக்கியிருக்கிறார். 

மண்முனை பாலம் கடந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை அடைந்தோம். இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. யுத்த வடுக்களால் பஞ்சத்தில் இருந்த நிலையில் இருந்தது, கட்டட பணிகள் மெதுவாக நகர்ந்த வண்ணம் இருந்தன, நுழைவாயில் கோபுரம் மட்டும் பூரணமாக கட்டப்பட்டிருந்தது. மிகவும் அமைதியான ரம்யமான சூழலில் ஆன்மா லயப்படும் ஓர் ஆலயத்தை தரிசித்த திருப்தியுடன் திரும்பினோம்.

மீண்டும் மண்முனை பாலத்தை கடந்து அருகில் இருந்த சிறிய பெட்டிக் கடையருகில் தலயின் கால் வாகனத்தின் பிரேக்கை ஓங்கி அழுத்தியது. சரியான பசி, ஆனால் வலீமா சாப்பாடு சில மணி நேரத்தில் இருக்கு, அதனால் சிறிது பலகாரம் ஏதும் சாப்பிடும் திட்டத்துடன் உள்ளே போனோம். பற்றிஸ், வடை கொடுத்த சுவை ப்ளேன்டி வெறியர்களை தூண்டிவிட்டது. பலகார அலுமாரி காலியானது, ஆளுக்கு நாலு ப்ளேன்டி வேறு. அனைவரும் ஆறு மாத பிள்ளைத்தாச்சி வயிற்றோடு மீண்டும் வாகனத்தில் ஏற வாகனம் பறக்கிறது....

வலீமாவுக்கு மதியம் 1 மணிக்கெல்லாம் போனால் போதும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நேரம் இருந்தது, கொஞ்சமாவது செமிக்க வேண்டும். மீண்டும் கல்லடி கடற்கரை வீதியை அடைந்நது கையஸ். வடக்கு பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் ஓரிடத்தில் தென்பட்டது சவுக்கங்காடு. 

சிங்களவர்கள் போல வாழ்க்கையை யாராலும் அனுபவித்து வாழ முடியாது. பெரிய வருமானம் இருக்காது, பணம் பெரிதாக இருக்காது ஆனால் கிடைக்கும் வாகனம் எதுவோ; அதில் குடும்பமாக, ஊராக என கிளம்பி வந்துவிடுவார்கள். ஒரு மர நிழலில் சோறும் பருப்பும் சமைத்து சாப்பிட்டுவிட்டு சுற்றிப் பார்ப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. சவுக்கு காட்டிலும் ஒரு பட்டா வாகனத்தில் வந்த குடும்பம் சமையல் ஆக்கிக் கொண்டிருந்தது. ஆனால் சாப்பாடென்றால் திரும்பிக்கூட பார்க்க மனமில்லாத நிலையில் வயிறு நிரம்பியிருந்தது. 

வாகனத்தில் இருந்து இறங்கி சவுக்கங் காட்டினூடு நடக்க தொடங்கினோம்; செமிக்கிற அளவில் லாபம் என்று. போகப்போக போய்க்கொண்டே இருந்தது, ஆனாலும் போய்க்கொண்டே இருந்தோம். ஒரு வழியாக புதிய அனுபவமாக அந்த சவுக்கங் காட்டின் முடிவை அடைந்துவிட்டோம். பிரமிப்பு, காட்டுக்கு அடுத்து பெரியதொரு வெளி, வெளிக்கு அடுத்து கடல்நீர் தெரிகிறது. உச்சி வெயில் வேறு மண்டையை பிறக்கிறது. அனைவரும் அடுத்து நகர மறுக்க;எமக்கு பரிச்சயமானவர் என்றாலும் எமது நெருங்கிய வட்டத்தில் இல்லாத, இந்த பயணத்தில்தான் எம்முடன் புதிதாக இணைந்திருந்த; அபிராம் என்னோடு தொடர்ந்து வர ஆர்வம் காட்டினார்.

மண்டையை பிளக்கும் வெய்யிலை கடந்து கடற்கரையை அடைய நிறையவே களைத்து விட்டோம். அப்படி என்ன இருக்கிறது அந்த நீர் பரப்பில்? அந்த சிறிய நீர்ப்பகுதிதான் மட்டக்களப்பின் பேரழகான நிலத்தை ஊடறுத்து உள்ளிருக்கும் நீர்ப்பகுதிக்கான ஒரே கடல் தொடுகையிடம். வந்தது வீண்போகவில்லை, புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் அழகாகவும் இருந்தது, மறு கரையில் சிலர் குளித்துக்கொண்டும் இருந்தனர். 10 நிமிடங்கள் அங்கு நின்றபின் மீண்டும் வெயிலின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பிக்க ஓட்டமும் நடையுமாக மீதி நண்பர்கள் இருந்த இடம் வந்தோம். 1/3 வயிறு காலியாகிவிட்டது, திரும்ப நடந்து சவுக்கங் காட்டினூடு ஆரம்ப இடத்தை அடைய மீதியும் செரித்துவிடும் என்கிற நம்பிக்கை வந்திருந்நது. 

பேசிப்பேசி சற்று வேகமாக நடக்கத் தொடங்கினோம்.. 

தொடரும்.....

கல்லடி கடற்கரை அதிகாலை

சவுக்கங் காட்டினுள்... 

 கொக்கட்டிச்சோலை

 மண்முனை சிற்றுண்டி சாலை

 நீர் நிலத்தை ஊடறுக்கும் பகுதி

No comments:

Post a Comment